ரோகிணி சிந்தூரி மீது துறை ரீதியான விசாரணை- கர்நாடக அரசு உத்தரவு


ரோகிணி சிந்தூரி மீது துறை ரீதியான விசாரணை- கர்நாடக அரசு உத்தரவு
x

விதிகளை மீறி நீச்சல் குளம் கட்டியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

ரூ.6 கோடி முறைகேடு

கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி கடந்த 2020-ம் ஆண்டு மைசூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அப்போது பாரம்பரிய கட்டிடமான கலெக்டா் பங்களாவில் உரிய அனுமதி இன்றி நீச்சல் குளம் கட்டியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் மைசூருவில் கலெக்டராக இருந்தபோது, முன்னாள் மந்திரி சா.ரா.மகேசுடன் மோதல் போக்கை பின்பற்றினார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வந்தது. ரோகிணி துணி பை வாங்கியதில் ரூ.6 கோடி முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுஎழுந்தது.

அவர் மாநில அரசில் இந்து அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும் இடையே பகிரங்க மோதல் ஏற்பட்டது. ரோகிணியின் தனிப்பட்ட புகைப்படங்களை ரூபா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியார். அவருக்கு எதிராக கோர்ட்டில் ரோகிணி சிந்தூரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

துறை ரீதியான விசாரணை

மேலும் ரோகிணி சிந்தூரி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிசங்கர் நியமிக்கப்பட்டார். அவர் அரசுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு எதிராக துறை ரீதியாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி யோகேந்திர திரிபாதி, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் உஜ்வல்குமார் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story