இந்திரா உணவகத்தில் சாப்பிட்ட துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்


இந்திரா உணவகத்தில் சாப்பிட்ட துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
x

பெங்களூருவில் உள்ள இந்திரா மலிவு விலை உணவகத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மக்களோடு சேர்ந்து நின்று உணவு சாப்பிட்டார். அவர் உப்புமா, கேசரியை ருசித்தார்.

பெங்களூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

கர்நாடக துணை முதல்-மந்திரியாக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர் நேற்று பெங்களூரு யஷ்வந்தபுரம் பகுதியில் நகர்வலம் மேற்கொண்டார். அப்போது யஷ்வந்தபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 3 குப்பை கழிவுகள் மறுசுழற்சி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து சொக்கசந்திராவுக்கு சென்ற அவர் அங்குள்ள இந்திரா மலிவு விலை உணவகத்தில் காலை உணவு சாப்பிட சென்றார்.

ஆனால் அங்கு உணவு காலியாகி விட்டது என்று ஊழியர் கூறியதால், அவர் தாசரனஹள்ளிக்கு சென்று அங்குள்ள இந்திரா மலிவு விலை உணவகத்தில் காலை உணவை சாப்பிட்டார். மேலும் அவருடன் சென்ற காங்கிரஸ் கட்சியினரும், அதிகாரிகளும் அங்கு காலை உணவு சாப்பிட்டனர். மக்களோடு சேர்ந்து நின்று டி.கே.சிவக்குமார் உணவு சாப்பிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பொதுமக்கள் டி.கே.சிவக்குமாரை செல்போன்களில் படம் பிடித்தனர். செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

வாடிக்கையாளர்...

உப்புமா மற்றும் கேசரியை டி.கே.சிவக்குமார் ருசித்து சாப்பிட்டார். மேலும் இந்திரா உணவகத்தில் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும் கேட்டறிந்தார். காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு வாடிக்கையாளர் ரூ.10 கொடுத்தார். அதை உணவக ஊழியர் வாங்கினார். அப்போது ஒரு தட்டு உப்புமா மற்றும் கேசரியின் விலை ரூ.5 தான்.

நீங்கள் ஏன் ரூ.10 வாங்குகிறீர்கள் என்று அவரிடம் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பினார். அப்போது அந்த ஊழியர், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் 2 தட்டு உணவுகள் வாங்கியதாக கூறினார்.அதை கேட்டுக் கொண்ட டி.கே.சிவக்குமார் வாடிக்கையாளரிடம் உணவு ருசியாக இருக்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் வைரல்

அதையடுத்து அவர் சீகேஹள்ளி, கன்னஹள்ளி, திப்பேஹள்ளி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் குப்பை கழிவுகள் மறுசுழற்சி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக இந்திரா உணவகத்தில் உணவு வாங்குவதற்காக டி.கே.சிவக்குமார் ரூ.500 நோட்டு கட்டை எடுத்து அதிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.


Next Story