மும்பை மாநகராட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து சிறப்பு தணிக்கை - பட்னாவிஸ்


மும்பை மாநகராட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து சிறப்பு தணிக்கை - பட்னாவிஸ்
x

மும்பை மாநகராட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து சிறப்பு தணிக்கை செய்யப்படும் என்று சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

நாட்டின் பணக்கார மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி கருதப்படுகிறது.

சிவசேனாவின் கோட்டை

பல சிறிய மாநிலங்களை விட, மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தொகை அதிகமாக இருப்பதால், இது பணக்கார மாநகராட்சியாக கருதப்படுகிறது.

இந்த மாநகராட்சி சிவசேனாவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கட்சியே மும்பை மாநகராட்சியில் அதிகாரம் செலுத்தி வருகிறது. இந்தநிலையில் மாநகராட்சியின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் நிறைவு பெற்றது. மாநகராட்சியின் நிர்வாக அதிகாரியாக கமிஷனர் இக்பால் சகால் நியமிக்கப்பட்டார். விரைவில் இந்த மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் மாநகராட்சியை சிவசேனாவிடம் இருந்து தட்டிப்பறிக்க பா.ஜனதா வியூகம் வகுத்து வருகிறது.

பட்னாவிஸ் அறிவிப்பு

இந்தநிலையில் சட்டசபையில் நேற்று மும்பை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்த காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து பேசியதாவது:-

மும்பை மாநகராட்சியின் ஊழல்கள் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி) சிறப்பு தணிக்கை செய்யப்படும். சாலைகளின் தரம், கொரோனா சிகிச்சை மையங்கள் அமைத்ததில் நடந்த ஊழல்கள் உள்ளிட்ட மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து இந்த தணிக்கை செய்யப்பட உள்ளது.

மற்றொரு விசாரணை

இதுதவிர மும்பை மாநகராட்சியின் ஒப்பந்த பணிகளை அதிகாரிகளே தங்களது சொந்த நிறுவனங்களை நிறுவி மேற்கொண்ட குற்றச்சாட்டும் உள்ளது. இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சி துறை தனியாக விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

நாங்கள் மும்பையின் சாலை மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். 3 ஆண்டுகளில் குண்டும், குழியும் இல்லாத சாலைகளாக மாற்றுவோம்.

தாராவி சீரமைப்பு

குடிசைப்பகுதி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தாராவி குடிசைப்பகுதியை மறுசீரமைப்பதற்கான முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்திற்காக ரெயில்வேக்கு மாநில அரசு ரூ.800 கோடி வழங்கி உள்ளது. சில பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வருகிற 30-ந்தேதிக்குள் இந்த குடிசை சீரமைப்பு திட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

மும்பையில் 29 ஆயிரத்து 9 துப்புரவு தொழிலாளர்கள் சொந்த வீடுகளை பெற உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story