தேர்தல் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஸ் விவரங்கள் கலெக்டர் அறிவிப்பு
மண்டியா மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஸ் விவரங்கள் குறித்து கலெக்டர் கோபாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.
மண்டியா-
மண்டியா மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஸ் விவரங்கள் குறித்து கலெக்டர் கோபாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவு
கர்நாடக சட்டசபைக்கு நாளை(புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) தேர்தல் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அந்தந்த தாலுகா தேர்தல் அலுவலகங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தளவாட பொருட்களை எடுத்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல உள்ளனர். நாளை காலை 6.15 மணி முதல் 6.30 மணிக்குள் அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அவர்களை அழைத்துச் செல்லவும், மீண்டும் அழைத்து வரவும் கே.எஸ்.ஆர்.டி.சி. அரசு பஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதுபோல் மண்டியா மாவட்டத்திலும் தேர்தல் பணியாளர்கள் தங்களுக்கான வாக்குச்சாவடிகளுக்கு செல்ல இருக்கிறார்கள். அவர்களுக்காக எந்தெந்த பகுதிளில் இருந்து அரசு பஸ்கள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அறிவிப்பை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோபாலகிருஷ்ணா நேற்று அறிவித்தார்.
மலவள்ளி தொகுதி
அதன்படி மலவள்ளி தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பஸ்கள் மலவள்ளி டவுனில் உள்ள சாந்தி பி.யூ. கல்லூரி மைதானத்திலும், மத்தூர் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பஸ்கள் மத்தூர் டவுனில் உள்ள எச்.கே. வீரண்ணா பி.யூ. கல்லூரியிலும் இருந்து புறப்பட உள்ளது.
மேலும் மேல்கோட்டை தொகுதிக்கான வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பஸ்கள் பாண்டவபுரா தாலுகா அலுவலகத்தில் இருந்தும், மண்டியா தொகுதிக்கான அரசு பஸ்கள் மண்டியாவில் உள்ள விஸ்வவித்யாலா கல்லூரியில் இருந்தும் புறப்பட உள்ளன. ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதிக்கான பஸ்கள் டவுனில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் இருந்தும், நாகமங்களா தொகுதிக்கான பஸ்கள் டவுனில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் இருந்து புறப்பட உள்ளன. கே.ஆர்.பேட்டை தொகுதிக்கான பஸ்கள் அங்குள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து புறப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு பஸ்கள்
இதன்காரணமாக இன்றும், நாளையும் என 2 நாட்களுக்கு பொதுமக்களுக்கான அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்படும் என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கலெக்டர் கோபாலகிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.