91-வது பிறந்தநாளை கொண்டாடிய தேவேகவுடா
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பசவராஜ் பொம்மை, சித்தராமையா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:-
தேவேகவுடா பிறந்தநாள்
முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமாக இருப்பவர் எச்.டி.தேவேகவுடா. இவர் நேற்று 91-வது பிறந்த நாளை கொண்டாடினார். ஹாசனில் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் 'கேக்' வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
91 வயதிலும் தேவேகவுடா திடகாத்திரமாக நடமாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலிலும், தேவேகவுடா ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.மேலும், தினமும் தனது வீட்டில் தினமும் யோகாவும், உடற்பயிற்சியும் செய்து வருகிறார். 91-வது பிறந்தநாளை கொண்டாடும் தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சித்தராமையா, குமாரசாமி, டி.கே.சிவக்குமார் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நமது தேசத்திற்காக அவரது பங்களிப்பை அளப்பரியது. அவரது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்' என்றார்.
கா்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், 'முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான ேதவேகவுடாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறேன். கன்னடர்கள் மற்றும் நமது நிலம், நீர், மொழியின் நலன்களை பாதுகாக்க அவர் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ள டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டர் பதிவில், 'மாநில மற்றும் தேசிய அரசியலில் தேவேகவுடா எடுத்துள்ள நடவடிக்கைகள் எங்களை போன்ற தலைவர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது. கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குவார்' என்றார்.
குமாரசாமி
தற்காலிக முதல்-மந்திரியாக உள்ள பசவராஜ் பொம்மை, தொலைபேசியில் தொடர்புகொண்டு தேவேகவுடாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேவேகவுடாவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான எச்.டி.குமாரசாமி தனது தந்தையை வாழ்த்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'தேவேகவுடா, எனது பலம், ஊக்கம், கலங்கரை விளக்கம், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் ஊந்துகோல். நாட்டுக்கும், கன்னட நாட்டுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது. அவரது அனுபவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இறைவன் அவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்க வேண்டும். தேவேகவுடா நம் அனைவரையும் நீண்ட காலம் வழிநடத்தி செல்லட்டும்' என்று கூறி இருந்தார்.
தேவேகவுடா ஜூன் மாதம் 1996-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்தியாவின் 11-வது பிரதமராகவும், 1994-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை கர்நாடகத்தின் 14-வது முதல்-மந்திரியாகவும் இருந்துள்ளார். தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.