அயோத்தியின் வளர்ச்சியால் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதன்பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
இன்று உலகம் முழுவதும் அடுத்த மாதம் 22-ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டவேண்டும் என்றால், தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இங்கு ரூ.15,000 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு தொடர்பான பணிகள் மீண்டும் நவீன அயோத்தியை நாட்டின் வரைபடத்தில் பெருமையுடன் நிறுவும். இன்றைய இந்தியா தனது புனித யாத்திரை தலங்களை அழகுபடுத்துவதுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் மூழ்கியுள்ளது. அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு பேசினார்.