மகளின் எடைக்கு நிகராக 51 கிலோ தக்காளியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய பெற்றோர்!


மகளின் எடைக்கு  நிகராக 51 கிலோ தக்காளியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய பெற்றோர்!
x
தினத்தந்தி 18 July 2023 4:04 PM IST (Updated: 18 July 2023 5:30 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் உள்ள நுகலம்மா கோயிலில், மகளின் எடைக்கு நிகராக சுமார் 51 கிலோ தக்காளியை அம்மனுக்கு, பெற்றோர் காணிக்கையாகச் செலுத்தினர்.

ஐதராபாத்,

நாட்டில் தக்காளி விலை தங்கம் விலை போல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தக்காளியை வைத்து வினோத சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகின்றன. சில விவசாயிகள் தக்காளியை விற்று ஒரே இரவில் கோடீசுவரர்களாக மாறி வருகின்றனர். சில சம்பவங்களில் விவசாயிகளிடம் இருந்து தக்காளியைத் திருடர்கள் திருடிச் செல்கின்றனர். இதனால் தக்காளியைப் பாதுகாக்க சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்களை அமர்த்தியது. இந்தநிலையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நுகலம்மா கோயிலில் ஒரு தம்பதியினர் தக்காளியுடன் 'துலாபாரம்' வழங்கினர். ஒரு கிலோ தக்காளி, 160 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால், 'துலாபாரம்' சிறப்பு அம்சமாக மாறியுள்ளது.

அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பா ராவ் மற்றும் மோகினி ஆகியோர் தங்கள் மகள் பவிஷ்யாவின் எடைக்கு எடை நிகரான தக்காளியை நுகாளம்மா கோயிலில் அம்மனுக்குத் துலாபாரத்தில் அர்ச்சனை செய்தனர். அம்மனுக்கு 51 கிலோ தக்காளி பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. இவை கோயிலின் அன்னதான நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் எனக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நித்யன்னதான நிகழ்ச்சியில் 51 கிலோ தக்காளி பயன்படுத்தப்படும் எனக் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவிலில் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்குவது நித்யநதான நிகழ்ச்சியாகும். ஆந்திராவில் உள்ள உள்ளூர் சந்தைகளில் 1 கிலோ தக்காளியின் விலை ரூ.160 ஆக உள்ளது. இந்துக்களிடையேயும், மற்ற சமூகத்தினரிடையேயும் கூட 'துலாபாரம்' செய்து, பொருட்களை எடைபோட்டு, கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் பழக்கம் நடைமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story