திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: இலவச தரிசனத்துக்கு 30 மணிநேரம் ஆகிறது


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: இலவச தரிசனத்துக்கு 30 மணிநேரம் ஆகிறது
x
தினத்தந்தி 6 Oct 2022 6:51 PM GMT (Updated: 6 Oct 2022 6:52 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்துக்கு 30 மணிநேரம் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். கோவிலில் 4-ந்தேதி வரை குறைவாக இருந்த பக்தர்கள் கூட்டம் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்தது.

திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி அருகில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டுகளிலும் நிரம்பினர்.

நேற்று காலை 10 மணியளவில் ஷெட்டுகளில் பக்தர்கள் நிரம்பி, அங்கிருந்து ஸ்ரீவாரிபாதாலு செல்லும் வழியில் சிலா தோரணம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இலவச தரிசன பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் மூலவரை வழிபட 30 மணி நேரம் ஆகிறது.

நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 32 ஆயிரம் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் கோவிலில் 63 ஆயிரத்து 579 பக்தா்கள் சாமி தாிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 524 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 95 லட்சம் கிடைத்தது. கடந்த சில நாட்களாக உண்டியல் வருமானம் குறைந்து வருவதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story