விநாயகர் சதுர்த்தி: மராட்டிய மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு
மும்பையில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
மும்பை,
மும்பையில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று நகரமே களைகட்டும். கடந்த சில வாரங்களாக மண்டல்களுக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வரப்படும்போதே கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. மக்களின் ஆரவாரத்திற்கும், கூட்டத்திற்கும் இடையே மிதந்தபடிதான் விநாயகர் சிலைகள் மண்டலுக்கு கொண்டுவரப்பட்டன. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவிழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் பொருட்கள் வாங்கவும், கடைசி நேரத்தில் விநாயகர் சிலைகள் வாங்கவும் சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. எங்கு நோக்கினும் அலங்காரங்கள், வண்ணப்பொடிகள், மண்டலுக்கு செல்லும் விநாயகர் சிலைகளை காணமுடிந்தது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்ததை பார்க்க முடிந்தது.
மும்பையில் பிரபலமான மண்டல்களான லால்பாக் ராஜா விநாயகர் சிலையையும், மாட்டுங்காவில் உள்ள ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பணக்கார விநாயகர் சிலையையும் காண அதிகமான பக்தர்கள் வருகை தந்தனர். மும்பை முழுவதுமே இன்று விநாயகர் சதுர்த்தி களை கட்டியது.