கடந்த நிதியாண்டில் நேரடி வரிவசூல் ரூ.19.58 லட்சம் கோடி
கடந்த நிதியாண்டில் நேரடி வரிவசூல் ரூ.19.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 18 சதவீதம் அதிகமாகும்.
புதுடெல்லி,
கடந்த 2023-2024 நிதியாண்டில் வருமானவரி, கார்ப்பரேட் வரி போன்ற நேரடி வரிகள் மூலம் ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ.19 லட்சத்து 45 ஆயிரம் கோடி என்று மதிப்பீடு உயர்த்தப்பட்டது.
ஆனால், இந்த மதிப்பீடுகளை விட அதிகமாக நேரடி வரிவசூல் கிடைத்துள்ளது. அதாவது, ரூ.19 லட்சத்து 58 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. முந்தைய 2022-2023 நிதியாண்டில், நேரடி வரிவசூல் ரூ.16 லட்சத்து 64 ஆயிரம் கோடி மட்டுமே கிடைத்தது. அதனுடன் ஒப்பிடுகையில், 17.7 சதவீதம் அதிகமான வசூல் எட்டப்பட்டுள்ளது. இதற்கு தனிநபர் வருமானமும், கார்ப்பரேட் வருமானமும் அதிகரித்ததே காரணம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 79 ஆயிரம் கோடி 'ரீபண்ட்' அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், கடந்த நிதியாண்டில், மறைமுக வரிகள் வசூல் ரூ.14 லட்சத்து 84 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதுவும் மதிப்பீட்டை விட அதிகம் ஆகும்.