மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்றம்...!


தினத்தந்தி 9 Aug 2023 5:23 AM GMT (Updated: 9 Aug 2023 3:24 PM GMT)

மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என அமித்ஷா கூறியுள்ளார்.



Live Updates

  • 9 Aug 2023 1:59 PM GMT

    மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்றம்...!

    மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமித்ஷாவின் கோரிக்கையின் அடிப்படையில் மக்களவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சமூகத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார். வன்முறையை விட்டுவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இரு சமூக மக்களுக்கும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார் - அமித்ஷா
    9 Aug 2023 1:03 PM GMT

    "2024ஆம் ஆண்டு தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார்" - அமித்ஷா

    மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாத்தில் உள்துறை மந்திரி அமிஷா பேசியதாவது:-

    இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறார். உலகளவில் அதிகம் மதிக்கப்படும் தலைவர் பிரதமர் நரேந்திரமோடி. ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்த 13 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    விவசாயிகளுக்கு நாங்கள் இலவசங்களை வழங்கவில்லை, ஆனால் அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக ஆக்கியுள்ளோம். விவசாயிகள் கடன் வாங்க அவசியமில்லாத நிலை பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கி வருவது மோடி அரசு தான்.

    வட கிழக்கு மாநிலங்களுக்கு முந்தைய அரசு எதுவுமே செய்யவில்லை; அங்கு அனைத்து தரப்பு வளர்ச்சியையும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார் என்றார்.

  • 17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி - மக்களவையில் அமித்ஷா பேச்சு
    9 Aug 2023 12:49 PM GMT

    17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி - மக்களவையில் அமித்ஷா பேச்சு

    மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாத்தில் உள்துறை மந்திரி அமிஷா பேசியதாவது:-

    நரேந்திர மோடி பிரதமரான பிறகே கோடிக்கணக்கான ஏழை மக்கள் வளர்ச்சியை கண்டனர். நாட்டு மக்களுக்காக ஒரு நாளைக்கு 17 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார். ஒருநாள் கூட விடுமுறையின்றி, ஓய்வின்றி உழைப்பதால் மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

    காங்கிரசை போல் ஊழல் செய்யாமல், மக்களின் மானியத்தொகையை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம். கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான பரப்புரை செய்தவர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ். கொரோனா வைரஸில் இருந்து 130 கோடி இந்தியர்களை மோடி அரசு காப்பாற்றியது.

    2014ம் ஆண்டு முதல் வளர்சிக்கான இந்தியாவை நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ். நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மக்களுக்கு அனைத்தும் தெரியும் என்றார்.

  • மத்திய அரசு மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் - மக்களவையில் அமித்ஷா பேச்சு
    9 Aug 2023 11:52 AM GMT

    மத்திய அரசு மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் - மக்களவையில் அமித்ஷா பேச்சு

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் அமித்ஷா பதில் அளித்து வருகிறார்.

    மத்திய பாஜக அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களிடம் அச்சத்தை உருவாக்க கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

    மக்களால் மிகவும் விரும்பப்படும் பிரதமராக மோடி திகழ்கிறார். அறுதி பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் மோடி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

  • ராகுல் காந்தி பேசியதை முழுமையாக ஒளிபரப்பவில்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு
    9 Aug 2023 10:57 AM GMT

    'ராகுல் காந்தி பேசியதை முழுமையாக ஒளிபரப்பவில்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு

    மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி பேசியபோது அரசின் சன்சத் டிவியில் முழுமையாக ஒளிப்பரப்பவில்லை எனவும் ராகுல்காந்தி 15 நிமிடம் 42 விநாடிகள் பேசிய நிலையில் 11 நிமிடம் 8 விநாடிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது, அதிலும் 11 நிமிடங்கள் 8 விநாடிகள் சபாநாயகரை மட்டுமே காட்டியதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

  • நீங்கள் இந்தியா இல்லை - ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கண்டனம்
    9 Aug 2023 8:09 AM GMT

    நீங்கள் இந்தியா இல்லை - ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கண்டனம்

    ராகுல்காந்தியின் பேச்சை கண்டித்து பேசிய மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறுகையில், நீங்கள் இந்தியா இல்லை, இந்தியா என்பது ஊழல் இல்லாதது. நான் தகுதியை நம்புவேன் குடும்ப அரசியலை நம்பவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம் நாம் பிரிட்டிஷாருக்கு என்ன கூறினோம் என்பதை இந்த நாளில் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஊழல் இல்லாத இந்தியா, குடும்ப அரசியல் இல்லாத இந்தியா. தகுதிக்கு இந்தியாவில் இடமுண்டு’ என்றார்.

  • 9 Aug 2023 7:31 AM GMT

    பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்று விட்டது - ராகுல்காந்தி

    பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்று விட்டது. மணிப்பூர் மட்டுமல்ல இந்தியாவையும் கொன்றுவிட்டனர். பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டும் கொல்லவில்லை, இந்தியாவையே மணிப்பூரில் கொன்று விட்டது என ராகுல்காந்தி கூறினார்.  

  • ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் மக்களவையில் அமளி
    9 Aug 2023 7:28 AM GMT

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் மக்களவையில் அமளி

    ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது:-

    ஒற்றுமை நடைபயணத்தின்போது அனைத்து தரப்பு மக்களின் குரல்களையும் கேட்டேன்.

    நான் இன்று பேச தொடங்கியவுடன் வெறுப்புடன் சிலர் பேசத் தொடங்கினார்கள்;

    இந்த வெறுப்புணர்வை நீக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

    ஒற்றுமை யாத்திரையின் மூலமாக நான் நிறைய கற்றுக் கொண்டேன்;உண்மையான இந்தியாவை அந்த பயணத்தின் வழியாக நான் பார்த்தேன்.

    "நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை.

    அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை; பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார்.

    தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது.

    மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர். துரோகிகள் என ராகுல்காந்தி கூறினார்.

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

  • 9 Aug 2023 7:18 AM GMT

    நீங்கள் மணிப்பூரை பிளவுபடுத்தி உடைத்துவிட்டீர்கள் - ராகுல்காந்தி சாடல்

    நான் மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஆனால், மணிப்பூர் இனி இருக்காது. நீங்கள் மணிப்பூரை இரண்டாக பிரித்துவிட்டீர்கள். நீங்கள் மணிப்பூரை பிளவுபடுத்தி உடைத்துவிட்டீர்கள் என ராகுல்காந்தி கூறினார்.


Next Story