'108' ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சம்பள பிரச்சினை குறித்து இன்று பேச்சுவார்த்தை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சம்பள பிரச்சினை குறித்து இன்று பேச்சுவார்த்தை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2022 6:45 PM GMT (Updated: 6 Oct 2022 6:45 PM GMT)

'108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பள பிரச்சினை குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நம்ம கிளினிக்குகள்

கர்நாடகத்தில் 438 நம்ம மருத்துவ கிளினிக்குகள் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் திறக்கப்படும். இவற்றில் பணியாற்றுவதற்காக புதிதாக 160 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற ஊழியர்களை நியமிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் 83 டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் மற்றும் குடிசை வாழ் மக்களுக்கு இந்த திட்டத்தால் பயன் கிடைக்கும்.

பெங்களூருவில் ஒவ்வொரு வார்டிலும் நம்ம கிளினிக்குகள் திறக்கப்படும். கிராமப்புறங்களில் மக்கள்தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு நகரங்களில் அரசு ஆஸ்பத்திரிகள் இல்லை. அதனால் இந்த நம்ம கிளினிக்குகள் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது.

ரூ.155 கோடி செலவாகும்

அரசு கட்டிடம் இல்லாத பகுதிகளில் வாடகை கட்டிடத்தில் இந்த கிளினிக்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,000 சதுரஅடியில் கட்டிடம் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக ரூ.155 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி யோகா, பிராணயாமா, தியானம் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும். கர்நாடகத்தில் '108' எண் அரசு ஆம்புலன்சுகளை நிர்வகிக்கும் பணி ஜி.வி.கே. என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக அந்த நிறுவனம் தான் சேவையை வழங்கி வருகிறது.

சம்பள பிரச்சினை

அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு அந்த நிறுவனத்திற்கு வழங்குகிறது. ஆனால் அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்குவது இல்லை என்று புகார் எழுந்துள்ளது. அதனால் இந்த சம்பள பிரச்சினை குறித்து அந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் அந்த ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இதில் சம்பள பிரச்சினைக்கு சுமுக தீர்வு எட்டப்படும்.ஆம்புலன்சுகளை நிர்வகிக்க புதிய டெண்டரை விட்டுள்ளோம். இன்னும் 2 மாதத்தில் புதிய டெண்டர் இறுதி செய்யப்படும். ஜி.வி.கே. நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு சேவையை வழங்கவில்லை. அதனால் புதிய நிறுவனத்தை தேர்ந்தெடுக்கிறோம். பைக் ஆம்புலன்ஸ் தேவை இல்லை என்று நிபுணர்கள் கூறிவிட்டனர். அதனால் அந்த முடிவை நாங்கள் கைவிட்டுவிட்டோம்.

இறுதி செய்யவில்லை

ஏர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் அதுகுறித்த திட்டத்தை இறுதி செய்யவில்லை. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story