மின்னணு முத்திரைகளில் திருத்தம் செய்ததாக குற்றச்சாட்டு; பெங்களூரு தனியார் நிறுவனத்தின் மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
மின்னணு முத்திரைகளில் தவறு செய்தது தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரிய பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பெங்களூரு:
மின்னணு முத்திரைகள்
பெங்களூருவை சேர்ந்த ஐ.பி. டிராக் சொல்யூசன் நிறுவனம், 'ரேடியோ பிரிக்வன்சி' அடையாள தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னணு முத்திரைகளை (இ.சீல்) கொள்முதல் மற்றும் அவற்றை வினியோகம் செய்யும் வணிகத்தை செய்து வருகிறது. அந்த நிறுவனம் ஒரு இத்தாலி நிறுவனத்துடன் இணைந்து இந்த வணிகத்தை மேற்கொண்டது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்காக இத்தாலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த முத்திரைகள் ஒரு கன்டெய்னர் லாரியில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த முத்திரைகள் இத்தாலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. அதை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் வினியோகம் செய்யும் பணியை செய்து வருகின்றன.
துறைமுகத்தில் அந்த கன்டெய்னரில் இருந்த முத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் நவீன தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்தனர். அந்த நிறுவனம் மத்திய அரசின் திட்டத்தில் கலந்து கொண்டு மின்னணு முத்திரைகளை ஏற்றுமதி செய்யும் பணியை செய்து வந்தது. அந்த முத்திரைகளை உடைக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த முத்திரைகளை திருத்த முடியாதவையாக இருக்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனத்தின் முத்திரைகள் திருத்த கூடிய வகையில் இருந்தது தெரியவந்தது.
மனு தள்ளுபடி
இதையடுத்து மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை இயக்குனரகம், அந்த நிறுவனத்திற்கு நோட்டீசு அனுப்பி அந்த மின்னணு முத்திரைகளை விற்கக்கூடாது என்று கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும் அந்த பெங்களூரு நிறுவனத்தின் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும் மத்திய அரசின் வருவாய்த்துறை இயக்குனரகம், அந்த நிறுவனத்திற்கு எதிராக முதலாவது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
தங்கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அந்த ஐ.பி.டிராக் சொல்யூசன் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் சுதீந்திர தகினகோட்டே ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்து வந்தார். அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், "இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை. அவ்வாறு தலையிடுவதற்கான தகுதியான வழக்கு கிடையாது. தேசத்தின் பாதுகாப்பில் அந்த நிறுவனம் சமரசம் செய்து கொண்டுள்ளது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. அதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.