'லெஸ்பியன்' ஜோடிகளிடையே தகராறு: கல்லூரி மாணவியை பிளேடால் வெட்டிய தோழி தற்கொலை முயற்சி..!


லெஸ்பியன் ஜோடிகளிடையே தகராறு: கல்லூரி மாணவியை பிளேடால் வெட்டிய தோழி தற்கொலை முயற்சி..!
x

‘லெஸ்பியன்’ ஜோடிகளிடையே ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவியை பிளேடால் அறுத்துவிட்டு அவரது தோழி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு,

தாவணகெரே டவுனில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் சிக்கமகளூரு மாவட்டம் கடூரை சேர்ந்த ஜான்சி என்ற மாணவி பி.எட். படித்து வருகிறார். அவருடன் தாவணகெரேயை சேர்ந்த சிம்ரன் (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியும் படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். லெஸ்பியன் ஜோடியாக மாறிய அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்தனர். இந்த நிலையில் சிம்ரன், அதே கல்லூரியில் படித்து வந்த மற்றொரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். இது ஜான்சிக்கு பிடிக்கவில்லை.

இதனால் தன் மீதான காதல், லெஸ்பியன் உறவு முறிந்துவிடுமோ என்று எண்ணிய ஜான்சி, சிம்ரனை வேறொரு மாணவியிடம் பேசி பழகுவதை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு சிம்ரன் செவிசாய்க்காமல் தொடர்ந்து வேறு பெண்ணுடன் நட்பாக பேசி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜான்சி, சிம்ரனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு ஜான்சி, கல்லூரி விடுதியில் சிம்ரன் தங்கியிருந்த அறைக்கு சென்று தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சிம்ரனின் கழுத்து, முகத்தில் அறுத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சிம்ரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜான்சி, தானும் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வித்யாநகர் போலீசார், கல்லூரி விடுதிக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், லெஸ்பியன் ஜோடிகளான ஜான்சியும், சிம்ரனும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், சிம்ரன் மற்றொரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதனை பிடிக்காமல், ஜான்சி அவரை பிளேடால் அறுத்து கொல்ல முயன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story