'லூடோ' விளையாட்டின் போது தகராறு: சிறுவனை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது


லூடோ விளையாட்டின் போது தகராறு:  சிறுவனை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது
x

கலபுரகி அருகே ‘லூடோ’விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு: கலபுரகி அருகே 'லூடோ'விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

'லூடோ' விளையாட்டில் தகராறு

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாசியாலி கிராமத்தில் வசிக்கும் தம்பதியின் மகன் சாமாராயா பரீட் (வயது 16). இந்த சிறுவன் வீட்டின் அருகேயே சச்சின் கிரசாவலகி (22) என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து தினமும் செல்போனில் 'லூடோ' என்னும் ஆன்லைன் பகடை விளையாட்டு விளையாடுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சாமாராயாவும், சச்சினும் சேர்ந்து லூடோ விளையாடினாா்கள்.

அப்போது திடீரென்று 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது அங்கு வந்த சாமாராயாவின் சகோதரர், 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற சச்சின் கத்தியை எடுத்து வந்து மீண்டும் சாமாராயாவிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

சிறுவன் குத்திக்கொலை

பின்னர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சாமாராயாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த சிறுவன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினான். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாமாராயா பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்சல்புரா போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது 'லூடோ' விளையாடும் போது யார் வெற்றி பெற்றார்கள் என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சாமராயாவை சச்சின் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்சல்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சினை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story