தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிருப்தி


தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிருப்தி
x

சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால் போர்க்கொடி தூக்கியவர்களை பா.ஜனதா தலைவர்கள் சமரசப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே மூத்த தலைவர் லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்தார்.

பெங்களூரு:-

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

221 பேர் மனு தாக்கல்

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆளும் பா.ஜனதா சார்பில் 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம்(எஸ்) 143 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் ஆளும் பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். பலர் அக்கட்சியை விட்டு விலகி காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சனசூர், என்.ஒய்.கோபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தனர்.

கடும் அதிருப்தி

அக்கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள மந்திரி எஸ்.அங்கார், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.குமாரசாமி, நேரு ஒலேகர், கூளிகட்டி சேகர் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளனர். பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் டிக்கெட் கிடைக்காது என்று கூறியதால் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

போர்க்கொடி தூக்கினர்

அதானி தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால், முன்னாள் துணை முதல்-மந்திரியும், கர்நாடக பா.ஜனதா துணைத்தலைவரும், ஒருங்

கிணைப்பு குழு உறுப்பினருமான லட்சுமண் சவதியும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவர் நேற்று பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை லட்சுமண் சவதி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காங்கிரசில் சேர தயாராக உள்ளதாக கூறினார். அவரை கட்சியில் சேர்த்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தனர். அதன் பிறகு அவர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். அதானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லட்சுமண் சவதி போட்டியிட உள்ளார். இதை அக்கட்சி தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.

வாகன நெரிசல்

மேலும், யாதகிரியில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குருபாட்டீல் சிரதாள், நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். இதில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அக்கட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் வாகன நெரிசல் உண்டானது.

இதே போல் அரிசிகெரே தொகுதியில் பா.ஜனதா சார்பில் டிக்கெட் கிடைக்காததால் எடியூரப்பாவின் உதவியாளரான சந்தோஷ் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

எடியூரப்பாவின் உறவினரான அவரை சமாதானப்படுத்த அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அதேபோல் பேடராயனபுராவில் முனேந்திரா, உடுப்பியில் ரகுபதிபட் எம்.எல்.ஏ., பெலகாவி வடக்கில் அனில் பெலகே எம்.எல்.ஏ., கல்கட்டகி தொகுதியில் நிம்மண்ணனவர் எம்.எல்.ஏ., பைந்தூரில் சுகுமார் ஷெட்டி எம்.எல்.ஏ. மற்றும் பெலகாவியில் சில தொகுதிகளில் டிக்கெட் கிடைக்காதவா்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பா.ஜனதாவின் நற்பெயர்

கர்நாடக சட்டசபை தேர்தலில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு தாவி வருவதால் ஆளும் பா.ஜனதாவுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆளும் பா.ஜனதாவின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் டிக்கெட் கிடைக்காமல் போர்க்கொடி தூக்கியவர்களால் அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் கட்சிக்கு தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்துள்ள பா.ஜனதா தலைவர்கள், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த களத்தில் இறங்கியுள்ளனர். இதற்காக கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

முடிவை மாற்றினார்

இந்த முயற்சியின் விளைவாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த மீன்வளம் மற்றும் துறைமுகத்துறை மந்திரி எஸ்.அங்கார், திடீரென தனது முடிவை மாற்றியுள்ளார். இந்த தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாடுபட போவதாக அறிவித்துள்ளார். இப்படி ஒவ்வொருவராக அதிருப்தியாளர்களை சந்தித்து சமாதானப்படுத்த பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விலகியவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம்

அருண்சிங் திட்டவட்டம்

டிக்கெட் கிடைக்காமல் பிற கட்சிக்கு செல்கிறவர்கள் குறித்து கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறுகையில், "இங்கு அதிகாரத்தை அனுபவித்தவர்கள் பிற கட்சிகளுக்கு செல்கிறார்கள். அரசியல் சூழ்நிலைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியை விட்டு விலகி செல்கிறவர்களை நாங்கள் மீண்டும் சேர்க்க மாட்டோம். அவர்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்ப நினைத்தால் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்றார்.


Next Story