அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி 2-வது நாளாக தொடங்கியது...!
அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. தினமும் மொத்தம் 15 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
திருமலை,
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு பஸ்கள், சொந்த மற்றும் தனியார் வாகனங்களில் திருமலைக்கு வருகின்றனர். இதுதவிர அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகளில் வந்து திவ்ய தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.
கொரோனா தொற்று பரவலால் 3 ஆண்டுகளாக திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருப்பதி தேவஸ்தானம் சோதனை முறையில் நேற்று காலையில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளது.
அலிபிரி நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு காளிகோபுரத்தில் 10 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு 1,250-வது படியில் 5 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.
ஆதார் அட்டையுடன் நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். திவ்ய தரிசன டோக்கன்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே சோதனை முறையில் வழங்கப்படுகின்றன.
இதைப் பக்தர்கள் கவனித்து திவ்ய தரிசன டோக்கன்கள் பெற்று சாமி தரிசனம் செய்யலாம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.