நலத்திட்டங்களை இலவசங்கள் என கூறி சாமானியர்களை அவமதிக்க வேண்டாம் - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பதிலடி
நலத்திட்டங்களை இலவசங்கள் என கூறி சாமானியர்களை அவமதிக்க வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி,
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்தியபிரதேசத்தில் 4 லட்சத்து 51 ஆயிரம் பயனாளர்களுக்கு கட்டப்பட்ட புதிய வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நான் தீபாவளி கொண்டாடும்போது மத்திபிரதேசத்தின் ஏழை சகோதர்களும் தீபஒளி திருநாளை கொண்டாடுவார்கள் என வரிசெலுத்தும் ஒவ்வொருவரும் நினைப்பார்கள். அவருக்கு புதிய வீடு கிடைத்துள்ளது. அவர் மகளின் வாழ்க்கை உயரும். ஆனால், தங்களிடமிருந்து வசூலிக்கப்படும் பணம் இலவசங்களை விநியோகிக்க செலவிடப்படுவதை பார்த்து வரி செலுத்துபவர்கள் கவலைபடுகின்றனர்' என்றார்.
இந்நிலையில், இலவசங்கள் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், விலைவாசி உயர்வு குறித்து மக்கள் கவலைபடுகின்றனர். கல்வி ஏன் இலவசமாக கிடைக்கவில்லை?, சிகிச்சை ஏன் இலவசமாக கிடைக்கவில்லை?, மருந்துகள் ஏன் இலவசமாக கிடைக்கவில்லை? மின்சாரம் ஏன் இலவசமாக கிடைக்கவில்லை என மக்கள் கவலைபடுகின்றனர். அரசியல்வாதிகள் நிறைய வசதிகளை இலவசமாக பெறுகின்றனர். நிறைய பணக்காரர்களுக்கு வங்கிகள் கடனை தள்ளுபடி செய்கின்றன. நலத்திட்டங்களை இலவசங்கள் என மீண்டும் மீண்டும் கூறி சாமானிய மக்களை அவமதிக்க வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.