ஜனநாயகம்னா என்னன்னு தெரியுமா...? பள்ளி மாணவனின் காமெடியான விளக்கம்; வைரலாகும் வீடியோ


ஜனநாயகம்னா என்னன்னு தெரியுமா...?  பள்ளி மாணவனின் காமெடியான விளக்கம்; வைரலாகும் வீடியோ
x

ஜனநாயகத்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பள்ளி மாணவன் அளித்த காமெடியான விளக்கங்கள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.



புனே,


நாட்டின் 74-வது குடியரசு தினம் கடந்த 26-ந்தேதி உற்சாகமுடன் நாடு முழுவதும் மக்களால் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மூவர்ண கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில், பலரும் பல விசயங்களை பற்றி பேசினர். ஆனால், மராட்டியத்தில் உள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய பேச்சுகள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில் சிறுவன், உண்மையில் இன்றுதான் ஜனநாயக தினம். இந்த நாளில் இருந்தே நாட்டில் ஜனநாயகம் தொடங்கியது.

அதனை நான் நேசிக்கிறேன். ஜனநாயகத்தில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். சண்டை போடலாம். நண்பர்களாக இருக்கலாம். காதல் செய்யலாம்.

ஆனால், சிறு சிறு தவறுகளை செய்வதிலும், பிராங்க் விளையாடுவதிலும், வனத்தில் நடந்து செல்வதும், குரங்கு போல் மரத்தில் ஏறுவதும் எனக்கு விருப்பம் ஆகும்.

இது எல்லாவற்றிற்காகவும் எனது தந்தை என்னை அடிக்கமாட்டார். ஏனெனில், ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், கிராமத்தில் உள்ள சின்ன பையன்கள், எனது ஆசிரியரிடம் என்னை பற்றி புகார் கூறி விடுகின்றனர்.

அதன்பின்பு, பயங்கரவாதிகள் ஜனநாயகத்தின் மதிப்புகளை தூக்கி போட்டு மிதிப்பது போல், ஆசிரியர் என்னை மிதித்து விடுவார். சில சமயங்களில் ஆசிரியர் என்னை உக்கி போட சொல்கிறார். எனது அணுகுமுறை ஜனநாயக முறையில் இல்லை என கூறுவார்.

எனக்கு எதிராக அவருக்கு நிறைய புகார்கள் வரும். உண்மையை கூறுவதென்றால், என்னை போன்ற எளிமையான மற்றும் ஏழ்மையான சிறுவன் இந்த ஒட்டுமொத்த தாலுகாவிலேயே கிடையாது. இத்துடன், என்னுடைய விலைமதிப்பற்ற எண்ணங்களை நான் நிறுத்தி கொள்கிறேன். வாழ்க ஜனநாயகம் என சிறுவன் பேசியுள்ளான்.

இதனை கேட்டு கொண்டிருந்தவர்கள் அடக்க முடியாமல் சிரிக்கும் காட்சிகளும் வீடியோவில் காணப்படுகின்றன. வருங்காலத்தில் ஒரு பெரிய தலைவராக இந்த சிறுவன் வருவான் என டுவிட்டர் பயனாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த இளம் வயதில் ஜனநாயகம் பற்றி சிறுவனுக்கு நிறைய புரிதல்கள் உள்ளன என மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.



Next Story