குடிபோதையில் பெண் நோயாளியை அடித்த டாக்டர்; சத்தீஷ்காரில் அவலம்


குடிபோதையில் பெண் நோயாளியை அடித்த டாக்டர்; சத்தீஷ்காரில் அவலம்
x

சத்தீஷ்காரில் குடிபோதையில் இருந்த டாக்டர் ஒருவர் மருத்துவமனையில் பெண் நோயாளியை அடித்த அவலம் ஏற்பட்டு உள்ளது.



கோர்பா,


சத்தீஷ்காரில் கோர்பா மாவட்டத்தில் கெர்வானி கிராமத்தில் வசித்து வருபவர் ஷியாம் குமார். இவரது தாயார் சுக்மதி. இந்நிலையில் ஷியாமின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, உடனடியாக அவசர எண்ணான 108 மற்றும் 112-ஐ தொடர்பு கொண்டு அழைத்து உள்ளார். ஆனால், நாங்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடல்நலம் மோசமடைந்த நிலையில், உடனடியாக ஆட்டோ ஒன்றில் தாயாரை ஏற்றி கொண்டு கோர்பா மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவருக்கு டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்தபோது, திடீரென அந்த பெண்ணை அவர் அடித்து உள்ளார். தனது தாயாரை டாக்டர் அடிப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த ஷியாம் அவரை தடுத்து உள்ளார். அதற்கு, நீ அமைதியாய் இரு என பதிலுக்கு டாக்டர் கூறியுள்ளார்.

ஷியாமின் தாயாரை டாக்டர் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சம்பவத்தின்போது, டாக்டர் குடிபோதையில் இருந்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அந்த டாக்டருக்கு எதிராக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் அவினாஷ் மேஷ்ராம் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவினாஷ் கூறியுள்ளார்.


Next Story