டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வி.ஐ.பி கலாச்சாரம்: மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!
அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு மற்றும் மருத்துவர்கள் சங்கங்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதுடெல்லி,
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக்க ஒரு மருத்துவ அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதனை ஏற்று, டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் எம் ஸ்ரீனிவாஸ், மக்களவை செயலகத்தின் இணைச் செயலாளர் ஒய்.எம்.காந்த்பாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில், மருத்துவமனை நிர்வாகத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அதிகாரிகளாக இருப்பார்கள். அவர்கள், சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக்க நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் படி, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர ஆலோசனை சிகிச்சைக்கு வரும் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தற்போதைய எம்.பி.,க்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு, மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் பிற மருத்துவர்கள் சங்கங்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பினர் கூறுகையில், "ஒரு பக்கம், நாட்டில் வி.ஐ.பி கலாச்சாரம் இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். மறுபக்கம், எய்ம்ஸ் இயக்குநர் வி.ஐ.பி கலாச்சாரத்திற்கு வழிவகுத்து கடிதம் எழுதியுள்ளார்.
நாங்கள் எப்போதும் மருத்துவமனைகளில் வி.ஐ.பி கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கிறோம். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நோயாளியும் நல்ல சிகிச்சைக்கு தகுதியானவர், அதில் ஒரு எம்.பி மற்றும் சாமானிய நபரும் அடங்குவர்" என்று கூறியுள்ளனர்.
மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் கூறுகையில், "வி.ஐ.பி கலாச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறோம். எந்த நோயாளியும் மற்றொருவரின் சலுகைகளை விலையாகக் கொண்டு துன்பப்படக்கூடாது" என்று கூறியுள்ளனர்.
எம்.பி.க்களுக்கான புதிதாக வகுக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றப்படும் என்று நேற்று எய்ம்ஸ் இயக்குநர் கடிதம் எழுதிய நிலையில், அதனை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள பதிவில்,
"எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் ஏழைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக்க மருத்துவமனை நிர்வாகத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளது.