உடல் உறுப்புகளை தானம் செய்த கல்லூரி மாணவியின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்
சிக்கமகளூருவில் உடல் உறுப்புகளை தானம் செய்தகல்லூரி மாணவியின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்த ரக்ஷிதா (வயது 17) என்ற மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவருடைய இதயம் உள்பட 9 உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
ரக்ஷிதாவின் இதயம், ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மேலும் மற்ற உறுப்புகளும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதன்மூலம் 9 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த மாணவி ரக்ஷிதாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் உடல் உறுப்புகளை தானம் செய்த ரக்ஷிதாவின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கும் என்று சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இதுதவிர பல்வேறு அமைப்பினரும் ரக்ஷிதாவின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள்.