அரசு கார் வேண்டாம்; சொந்த தொகுதியை ஆட்டோவில் சென்று பார்வையிடும் பெண் எம்.எல்.ஏ.


அரசு கார் வேண்டாம்; சொந்த தொகுதியை ஆட்டோவில் சென்று பார்வையிடும் பெண் எம்.எல்.ஏ.
x

அரசு வாகனம் ஒதுக்கப்பட்டு இருந்தும், சொந்த தொகுதியை ஆட்டோவில் சென்று பார்வையிட்டு வரும் பெண் எம்.எல்.ஏ.வை மக்கள் வரவேற்கின்றனர்.



அகர்தலா,


திரிபுராவில் நடப்பு ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. சார்பில் கமலாசாகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அந்தாரா சர்க்கார் தேப். இவருக்கு எம்.எல்.ஏ.வுக்கான அதிகாரத்திற்கு உட்பட்டு அரசு சார்பில் வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.

எனினும், அதில் பயணிக்காமல் வாடகை ஆட்டோ ஒன்றில் சென்று சொந்த தொகுதியை அவர் பார்வையிட்டு வருகிறார். இதுபற்றி அந்த ஆட்டோவை ஓட்டும் பெண் ஓட்டுநரான லாக்யீ தேப்நாத் நஹா என்பவர் கூறும்போது, தனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையில் இருக்கிறார்.

அதனால், ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. பெண் எம்.எல்.ஏ.வுக்கு அரசு அதிகாரம் பெற்ற வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனினும், அவர் எனது ஆட்டோவிலேயே பயணம் செய்கிறார்.

அவர் நன்றாக கவனித்து கொள்வார். இந்த பகுதிக்கு வரும்போது, அவர் எனது ஆட்டோவில் மட்டுமே பயணம் செய்வார் என கூறியுள்ளார். எம்.எல்.ஏ. சர்க்கார் தேப் தனிப்பட்ட உபயோகங்களுக்கு மட்டுமின்றி, தொகுதியையும் ஆட்டோவில் சென்று பார்வையிடுவதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, எனது தொகுதியில் நீண்டகாலம் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். அதனால், இந்த எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறேன்.

பொதுமக்களுக்கு பணியாற்றுவதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த முறை பெண்களுக்கான அதிகாரம் உள்ளிட்ட, வளர்ச்சிக்கான தளத்தில் ஒவ்வொருவரையும் கொண்டு வரவேண்டும் என நான் விரும்புகிறேன்.

அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் தேவையான வளர்ச்சி என்ற மந்திரத்தில் கவனம் செலுத்தி, ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன் என்று எம்.எல்.ஏ. சர்க்கார் தேப் கூறியுள்ளார்.


Next Story