இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்பு


இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்பு
x
தினத்தந்தி 25 July 2022 5:54 AM IST (Updated: 25 July 2022 7:16 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் கோலாகல விழாவில் இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்கிறார். பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்கும், மாண்புக்கும் உரிய இந்தியா இன்று தனது 15-வது ஜனாதிபதியைப் பெறப்போகிறது.

திரவுபதி முர்மு

கடந்த 18-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களம் கண்ட திரவுபதி முர்மு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவை 2 லட்சத்து 96 ஆயிரத்து 626 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவர் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பல பெருமைகள்

திரவுபதி முர்மு, பல பெருமைகளை தன்னிடம் கொண்டிருக்கிறார்.

நாட்டில் பழங்குடி இனத்தில் இருந்து வந்துள்ள முதல் ஜனாதிபதி. இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி, இந்திய நாட்டின் ஜனாதிபதி நாற்காலியை இதுவரை அலங்கரித்த அனைவருமே நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னர் பிறந்தவர்கள்தான். இவர் மட்டும்தான் சுதந்திரத்துக்கு பின்னர் பிறந்த முதல் ஜனாதிபதி என்பதெல்லாம் சிறப்பு.

ஒடிசாவில், ராய்ரங்பூரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, படித்து, பட்டம் பெற்று, ஒடிசா நீர்வளத்துறையில் இளநிலை உதவியாளராகவும், பின்னர் பள்ளிக்கூட ஆசிரியராகவும் பணியாற்றி விட்டு, பொது வாழ்வுக்கு வந்தார்.

பஞ்சாயத்து கவுன்சிலர், ஒடிசா சட்டசபை உறுப்பினர், மாநில மந்திரி, நாடாளுமன்ற உறுப்பினர், ஜார்கண்ட் கவர்னர் என்று பல படிக்கட்டுகள் ஏறி வந்து நாட்டின் ஜனாதிபதி என்ற உன்னத உயரத்தை எட்டிப்பிடித்திருக்கிறார், 64 வயதான திரவுபதி முர்மு.

ஜனாதிபதி பதவி ஏற்பு விழா

தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று (திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவுக்காக நாடாளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக காலை 9.25 மணிக்கு திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு வருகிறார். அங்கு அவருக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அதையடுத்து 9.50 மணிக்கு திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு புறப்படுகிறார்கள். 10.03 மணிக்கு அவர்கள் நாடாளுமன்றம் வந்தடைகிறார்கள். அங்கு அவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

10.10 மணிக்கு அங்கு தேசியகீதம் இசைக்கப்படுகிறது.

10.15 மணிக்கு திரவுபதி முர்மு, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதும் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்கும். அதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு பதவி ஏற்பு உரை ஆற்றுவார்.

துணை ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள்

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முதல்-மந்திரிகள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

திரவுபதி முர்முவின் குடும்பத்தை பொறுத்தமட்டில் அவரது சகோதரர், சகோதரர் மனைவி, மகள், மருமகன் ஆகிய 4 பேர் மட்டுமே பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அணிவகுப்பு மரியாதை

பதவி ஏற்பு விழா முடிந்ததும் காலை 10.45 மணிக்கு திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு செல்வார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.

அதையடுத்து, பதவியை நிறைவு செய்து செல்லும் ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை வழங்கப்படுகிறது.

அவர், தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள எண்.12, ஜன்பத்தில் உள்ள புதிய மாளிகைக்கு சென்று குடியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story