ஷாருக் கானை நீக்கி விட்டு கங்குலியை மேற்கு வங்காள தூதராக்குங்கள்: மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.


ஷாருக் கானை நீக்கி விட்டு கங்குலியை மேற்கு வங்காள தூதராக்குங்கள்:  மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.
x

நடிகர் ஷாருக் கானை நீக்கி விட்டு கங்குலியை மேற்கு வங்காள விளம்பர தூதராக்குங்கள் என பா.ஜ.க.வின் எதிர்க்கட்சி தலைவர் சாடியுள்ளார்.



கொல்கத்தா,


இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ.யின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், வருகிற 18-ந்தேதி (நாளை) மும்பையில் பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொது கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட கூடும் என தகவல் வெளியானது.

இதற்கேற்ப பின்னி கடந்த 11-ந்தேதி தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். பி.சி.சி.ஐ. செயலாளராக பதவி வகிக்கும் ஜெய்ஷா, 2-வது முறையாக தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

ஆனால், கங்குலிக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாத சூழலால் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறும்போது, கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மக்களிடையே பிரபலம் வாய்ந்த சவுரவ் கங்குலி பா.ஜ.க.வில் சேரவுள்ளார் என்ற செய்தியை பரப்ப அக்கட்சி முயற்சித்தது.

ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்த சூழலில், பி.சி.சி.ஐ.யின் தலைவராக 2-வது முறையாக கங்குலி நீடிக்க முடியாத சூழலை பா.ஜ.க. ஏற்படுத்தி உள்ளது. மத்திய மந்திரி அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா, பி.சி.சி.ஐ. செயலாளராக 2-வது முறையாக தொடர முடியும். ஆனால், கங்குலி தலைவராக நீடிக்க முடியாது என்பது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கான ஓர் எடுத்துக்காட்டு என குற்றம் சாட்டினார்.

எனினும் பா.ஜ.க. தேசிய துணை தலைவர் திலீப் கோஷ் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என மறுத்து உள்ளார். கடந்த மே மாதத்தில் கங்குலி வீட்டுக்கு அமித்ஷா சென்றபோது, தீவிர அரசியலில் கங்குலி ஈடுபட கூடும் என யூகங்கள் வெளிவந்தன.

ஆனால், அமித்ஷாவை நீண்டகாலம் எனக்கு தெரியும் என்ற வகையிலேயே அவர் எனது வீட்டுக்கு வந்து சென்றார் என கங்குலி கூறினார். அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும் கிரிக்கெட் நிர்வாகத்திலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள போகிறேன் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்து உள்ளார். சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டும் கிடையாது.

அவர் இந்தியாவின் பெருமையும் கூட. அவர் ஏன் இவ்வளவு நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டார். கங்குலி மீது கவனம் செலுத்தி அவரை தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்டு கொள்கிறேன் என்றார். இந்த பதவிக்கு வரும் 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். கங்குலி போட்டியிட்டால் அவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பா.ஜ.க.வின் மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, நீங்கள் நடிகர் ஷாருக் கானை நீக்கி விட்டு கங்குலியை மேற்கு வங்காள விளம்பர தூதராக்குங்கள்.

சவுரவ் கங்குலியின் பதவி காலம் நீடிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி விரும்பினால், அவரை மேற்கு வங்காளத்தின் விளம்பர தூதராக்க வேண்டும். விளையாட்டில் நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். இதற்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இல்லை. இதில் இருந்து அவர் விலகியே இருக்கிறார் என காட்டமுடன் பேசியுள்ளார்.


Next Story