குடிபோதையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற 2 போலீசார் படுகாயம்
துமகூரு அருகே வேலையில் இருந்து நீக்கியதால் குடிபோதையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரு: துமகூரு மாவட்டம் கோரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லிங்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31). மதுபான கடையில் காசாளராக வேலை பார்த்து வந்த அவரை சமீபத்தில் உரிமையாளர் வேலையில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகினார். மேலும் தினமும் மது அருந்திவிட்டு பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். அதுபோல், நேற்று முன்தினம் இரவும் அவர் பெற்றோருடன் சண்டை போட்டுள்ளார். இதுபற்றி அறிந்ததும் கோரா போலீஸ் நிலைய போலீசார் குருரங்கப்பா மற்றும் கவிரங்கய்யா ஆகிய 2 பேரும் கோவிந்தராஜின் வீட்டுக்கு சென்று அவரை எச்சரித்தனர்.
இந்த நிலையில், போலீஸ்காரர்கள் சிறிது தூரம் சென்றதும் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டு கோவிந்தராஜ் தீவைத்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது போலீசார் 2 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடல் கருகி உயிருக்கு போராடிய கோவிந்தராஜ், 2 போலீசாரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். 2 போலீசாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.