பா.ஜனதா-காங்கிரசார் இடையே ஏற்பட்ட மோதலால் மூடுசெட் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்
மூடுசெட் பகுதியில் பா.ஜனதா மற்றும் காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மங்களூரு-
மூடுசெட் பகுதியில் பா.ஜனதா மற்றும் காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதன்காரணமாக அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜனதா-காங்கிரஸ் மோதல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மூடுசெட் கிராம பஞ்சாயத்து எல்லையில் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு காங்கிரஸ் வேட்பாளர் மிதுன் ராய் வந்தார். அப்போது அவரது கார் மீது கல்வீசி தாக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜனதா கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தின்போது போலீஸ் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, கூட்டம் கலைக்கப்பட்டது.
144 தடை உத்தரவு அமல்
மேலும் அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது மோதலை தூண்டியவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மூடுசெட் பகுதியில் பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வெளி ஆட்கள் அப்பகுதியில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு சோதனைச்சாவடியும் நிறுவப்பட்டு உள்ளது.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்படுவார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.