தசரா யானைகளின் கஜபயணம் இன்று நடக்கிறது; வீரனஒசஹள்ளியில் ஏற்பாடுகள் தீவிரம்


தசரா யானைகளின் கஜபயணம் இன்று நடக்கிறது; வீரனஒசஹள்ளியில் ஏற்பாடுகள் தீவிரம்
x

மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 9 யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தசரா யானைகளின் கஜபயணம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக வீரனஒசஹள்ளியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

குடகு;

மைசூரு தசரா விழா

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ் பெற்றதாகும். ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி என்னும் யானைகள் ஊர்வலம் நடக்கும்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால் தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. ஜம்பு சவாரி, அக்டோபர் 5-ந்தேதி நடக்கிறது. தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள் தேர்வு செய்யப்பட்டது.

அதாவது துபாரே, மத்திகோடு, ராம்புரா முகாம்களில் இருந்து அபிமன்யு, பீமா, கோபாலசாமி, அர்ஜூனா, விக்ரமன், தனஞ்ஜெயா, காவேரி, கோபி, விஜயா, சைத்ரா, லட்சுமி, பார்த்தசாரதி, ஸ்ரீராமா, மகேந்திரா ஆகிய 14 யானைகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமக்க உள்ளது.

9 யானைகள் அனுப்பி வைப்பு

இதில் நேற்று அபிமன்யு, அர்ஜூனா, காவேரி, தனஞ்ஜெயா, பீமா, கோபாலசாமி, மகேந்திரா உள்ளிட்ட 9 யானைகள் மைசூரு மாவட்டம் உன்சூரில் உள்ள வீரனஒசஹள்ளிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக துபாரே, மத்திகோடு, பந்திப்பூர் ராம்புராவில் உள்ள முகாம்களில் இருந்து யானைகளுக்கு குங்குமம் வைத்து மாலை அணிவித்து பாரம்பரிய பூஜை செய்து லாரிகள் மூலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா கெப்பாகிலுவை அடுத்த வீரனஒசஹள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.2-ம் கட்டமாக மற்ற 5 யானைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.


இன்று கஜபயணம்

இதற்கிடையில் இந்த முறை ஜம்பு சவாரி ஊர்வலத்தில் புதிதாக 3 யானைகள் இடம் பெற்றுள்ளது. அவை துபாரேவில் இருந்து ஸ்ரீராமா, ராம்புராவில் இருந்து பார்த்தசாரதி, மத்திகோடில் இருந்து மகேந்திரா ஆகும். வீரனஒசஹள்ளியில் இருந்து இன்று தசரா யானைகளின் கஜபயணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

இன்று காலை வீரனஒசஹள்ளியில் இருந்து யானைகள் பாரம்பரிய முறையில் சிறப்பு பூஜை செய்து மைசூருவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த யானைகள் மைசூரு அருகே அசோகபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு தங்க வைக்கப்படும் யானைகள், வருகிற 10-ந்தேதி பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் முழங்க மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட உள்ளன.


Next Story