சுள்ளியா தாலுகாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு


சுள்ளியா தாலுகாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு
x

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவானது.

மங்களூரு;

நிலநடுக்கம்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக காலை 9.09 மணி முதல் காலை 9.15 மணிக்குள் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த 2 முறையும் ஒருசில வினாடிகளே நிலநடுக்கம் இருந்துள்ளது.


சுள்ளியா தாலுகாவிற்கு உட்பட்ட மார்க்கஞ்சா, கொடப்பலா, கூனடுக்கா, அரந்தோடு ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது.நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பீதி அடைந்தனர். அவர்கள் வீடுகளைவிட்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

அச்சப்பட வேண்டாம்

நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுள்ளியா தாலுகாவிற்கு உட்பட்ட சில கிராமங்களில் இன்று(நேற்று) காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி இருக்கிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story