பிரியங்க் கார்கே, யத்னாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


பிரியங்க் கார்கே, யத்னாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x

பிரதமர் மோடி, சோனியா காந்தி குறித்து அவதூறான முறையில் பேசியது தொடர்பாக பிரியங்க் கார்கே, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்றைக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு இருக்கிறது.

பெங்களூரு:-

விஷக்கன்னி

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கதக்கில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடி விஷப்பாம்பு போன்றவர் என்றும், அவரை தொட்டால் செத்துவிடுவீர்கள் என்றும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த கருத்திற்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.

அதே நாளில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சர்ச்சைக்கு பெயர் பெற்றவரும், பா.ஜனதாவை சேர்ந்தவருமான பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., விஜயாப்புராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தியை விஷக்கன்னி என்று தரக்குறைவாக பேசினார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தகுதியற்ற மகன்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே, பிரதமர் மோடி 'தகுதியற்ற மகன்' என்று கூறினார். மூவரின் இந்த அவதூறு பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம், பிரியங்க் கார்கே, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு இன்று(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் குறித்த அநாகரீகமான பேச்சுக்காக அவர்கள் பிரசாரம் மேற்கொள்ள சில நாட்கள் தடை விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.


Next Story