குஜராத் தேர்தல்: அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த அறிக்கைகள் ஏன் வழங்கப்படவில்லை? தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
குஜராத்தில் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் ஆணையிட்டது.
புதுடெல்லி,
குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனினும் இன்னும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை நடவடிக்கைகளை பின்பற்றி, குஜராத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை உடனடியாக வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் குஜராத் மாநில தலைமை செயலாளருக்கும், காவல்துறை டிஜிபிக்கும் ஆணையிட்டது.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒரே மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பணிபுரிந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.அத்துடன் இது குறித்த இணக்க அறிக்கைகளை அனுப்ப செப்டம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு குஜராத் மாநில தலைமை செயலாளருக்கும், காவல்துறை டிஜிபிக்கும் ஆணையிட்டது.
இந்நிலையில், இதுவரை அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த அவர்கள் இணக்க அறிக்கைகளை அனுப்ப அவர்கள் தவறிவிட்டனர். ஆகவே குஜராத் மாநில தலைமை செயலாளரிடமும், காவல்துறை டிஜிபியிடமும் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுவரை இணக்க அறிக்கைகள் ஏன் வழங்கப்படவில்லை என்பதை விளக்குமாறு அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.