நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ராகுல் காந்தியிடம் என்ன கேள்விகளை கேட்பது என்பது குறித்து அமலாக்கத் துறையினர் ஏற்கனவே முடிவு செய்து இருந்தனர். அந்த கேள்விகளை வைத்து அவர்கள் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தினர். ராகுல் காந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையானது சுமார் 9 மணி நேரம் நீடித்தது. நாளையும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ராகுல் காந்தியை அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் டெல்லியில் காங்கிரசார் பெரும் அளவில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள், எம்.பி.க்கள், பேரணியாக சென்றனர்.