மராட்டிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர ஓட்டலில் 8 நாட்கள் தங்கியதற்கான செலவு ரூ.70 லட்சம் என தகவல்!


மராட்டிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர ஓட்டலில் 8 நாட்கள் தங்கியதற்கான செலவு ரூ.70 லட்சம் என தகவல்!
x

Image Credit:agoda.com

இந்த ஓட்டலில் மராட்டிய மாநில அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர்.

கவுகாத்தி,

அசாம் தலைநகர் கவுகாத்தின் 'ராடிசன் ப்ளூ' ஓட்டல், வடகிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள முதல் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஆகும். டீபோர் பீல் ஏரியின் பக்கத்தில், கவுகாத்தி பல்கலைக்கழகம் மற்றும் அசாம் பொறியியல் கல்லூரி வளாகங்களுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.

இந்த ஓட்டலில் தான் மராட்டிய மாநில அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் 8 நாள் தங்குவதற்கு ரூ. 70 லட்சம் கொடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ராடிசன் ப்ளூ ஓட்டலில் எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களுடன் சென்றவர்களுக்காக தங்குவதற்காக, ஓட்டலின் வெவ்வேறு தளங்களில் மொத்தம் 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

கடந்த புதன் கிழமை அன்று ஓட்டலை காலி செய்த எம்.எல்.ஏ.க்கள் குழு, காலி செய்வதற்கு முன்பே அவர்கள் தங்கள் பில்களை முடித்துவிட்டனர் என்று ஓட்டல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் தரப்பில் பணம் எதுவும் நிலுவையில் இல்லை என்று கூறினார்.

எனினும், மொத்த பில் குறித்து ஓட்டல் அதிகாரிகள் வாய் திறக்கவில்லை என்றாலும், ரூ.68-70 லட்சம் செலுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓட்டலில் உள்ள பல்வேறு வகையான அறைகளின் கட்டணங்கள் ஒவ்வொரு நாளும் மாறுபடும். உயர்ந்த அறைகளுக்கான வாடகை சுமார் ரூ.7,500 மற்றும் டீலக்ஸ் அறைகளுக்கு ரூ.8,500. ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு ரூ.8,400 வரை ஆகும். ஓட்டலில் சுமார் 55 டீலக்ஸ் அறைகள் உள்ளன.

எம்.எல்.ஏ.க்கள் குழுவினருக்கான மொத்த உணவு கட்டணம் சுமார் ரூ.22 லட்சம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அறை வாடகை கட்டணத்திற்குட்பட்ட இலவசமாக கிடைக்கும் வசதிகளை மட்டுமே அவர்கள் பயன்படுத்தினர் எனவும், ஸ்பா போன்ற கட்டணம் வசூலிக்கக்கூடிய வேறு எந்த வசதியையும் அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் ஓட்டல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் ஜூன் 22ம் தேதி அதிகாலையில் இருந்து கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story