மும்பை ஆரோ காலனி விவகாரம்: உத்தவ் தாக்கரே எடுத்த முடிவை மாற்ற ஏக்நாத் ஷிண்டே முடிவு
மும்பை ஆரோ காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளார்.
மும்பை,
மும்பையில் கொலபா-பாந்திரா-சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மேலும் அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு மெட்ரோ பணிகளுக்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கடும் எதிர்ப்பையும் மீறி அங்கு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வந்தது.
இந்த விசயத்தில் தாமாக முன்வந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. ஆரே காலனியின் மேற்கொண்டு மரங்களை வெட்ட தடை விதித்தது. அங்கு மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து, ஆட்சிக்கு வந்த சிவசேனா தலைமையிலான அரசு ஆரேகாலனியில் நடந்து வந்த மெட்ரோ பணிகளுக்கு தடைவிதித்தது. மேலும் ஆரேகாலனி பகுதியை வனப்பகுதியாக அறிவித்தது. ஆரேகாலனியில் அமைய இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி, ஆரேகாலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அம்மாநில அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ஆரேகாலனி பகுதியில் நிறைய பணிகள் செய்யப்பட்டுள்ளன.ஆனால் அங்கு மெட்ரோ பணிமனை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் மெட்ரோ திட்டப்பணிகளை செய்ய முடியவில்லை. கடந்த அரசு தேர்ந்தெடுத்த இடம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. நாங்கள் மெட்ரோ பணிமனை அமைக்க கூறிய இடத்தில் 25 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடிக்க முடியும்.
மும்பையின் நலன்கருதி, அந்த இடத்தில் தான் மெட்ரோ பணிமனை அமைக்க வேண்டும். அதனால் தான் அங்கு பணிமனை அமைக்க எங்கள் அரசு முடிவு செய்து உள்ளது".என தெரிவித்தார்.
இந்த நிலையில், மெட்ரோ பணிமனை திட்டத்தினை மாற்ற வேண்டாம் என மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.