தேர்தல் பிரசாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்


தேர்தல் பிரசாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்
x

சுட்டெரிக்கு கோடை வெயில் காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கூட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெங்களூரு:-

கொளுத்தும் வெயிலில் பிரசாரம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தெருமுனை பிரசாரம், வாகனங்களில் ஊர்வலம், பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தலைவர்கள் பேசி வருகின்றனர். கர்நாடகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கொளுத்தும் வெயிலிலும் தேர்தல் பிரசாரம்சூடுபிடித்துள்ளது.

கட்சிகளின் தொண்டர்களும், பொதுமக்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை கமிஷனர் ரன்தீப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு

மாநிலத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் மக்களின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறும் இந்த சந்தர்ப்பத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை திறந்த வெளி பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், கூட்டங்கள் நடத்த கூடாது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது திறந்த வெளிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் மக்களை பாதுகாக்க முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

திறந்த வெளி பகுதிகளில் சாமியானா பந்தல் அமைப்பது, சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதுடன், கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை பெங்களூரு மாநகராட்சி, தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முறையாக பரிசீலனை நடத்தி, உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story