சோனியா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
கர்நாடகத்தின் இறையாண்மை குறித்து பேசிய சோனியா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பெங்களூரு:-
இறையாண்மை
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி கர்நாடகத்தில் கடந்த 7-ந் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். உப்பள்ளியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினர்.
அவர் பேசும்போது,
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் 'இறையாண்மை'யை காப்போம் என்று குறிப்பிட்டார். தேர்தல் பிரசாரத்தில், சோனியா காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, இறையாண்மை என்று கூறியுள்ள சோனியா காந்தி, இந்தியாவில் இருந்து கர்நாடகத்தை பிரிக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கர்நாடக தலைமை தேர்தல் ஆணையத்தில் சோனியா காந்திக்கு எதிராக பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ஷோபா புகார் அளித்துள்ளார்.
சோனியா காந்திக்கு நோட்டீஸ்
அதில், "கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, சோனியா காந்திகர்நாடகத்தின் இறையாண்மை என்று பேசியுள்ளார். இறையாண்மை என்பது ஒரு தனிப்பட்ட நாட்டை குறிக்கும் சொல். இந்தியா சுதந்திரமான நாடு. இதில் கர்நாடகம் ஒரு பெருமை மிகுந்த மாநிலம் ஆகும். இறையாண்மை கொண்ட இந்தியாவுடன் இருக்கும் கர்நாடகத்தின் நேர்மை குறித்து இதுவரை யாரும் கேள்வி எழுப்பவில்லை. காங்கிரசின் கருத்து, கர்நாடகம் இந்தியாவில் இருந்து தனித்து இருப்பது போன்று உள்ளது. இந்த கருத்து நாட்டை பிளவுபடுத்துவதாக உள்ளது. அந்த கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கர்நாடகம் இந்தியாவுடன் ஒன்றுபட்டது. அதனால் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதாவின் புகார் தொடர்பாக சோனியா காந்திக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.