செலவு கணக்கு காட்டாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை- இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு
செலவு கணக்கு காட்டாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நாடாளுமன்றம், சட்டசபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.அந்த வகையில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்கை காட்டாத சில வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சட்டசபை தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் பிரபுவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், சங்கரன்கோவில் தொகுதி சுயேச்சை வேட்பாளர் பாலமுருகேசன், அவிநாசி தொகுதி சுயேச்சை வேட்பாளர் சகுந்தலா, சைதாப்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் இளங்கோ, வெங்கடேஷ், விருகம்பாக்கம் தொகுதி அண்ணா திராவிட மக்கள் கழக வேட்பாளர் தினேஷ்குமார் ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.