நாடாளுமன்ற தேர்தல் தேதியை நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்


நாடாளுமன்ற தேர்தல் தேதியை நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
x

4 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதேபோல் ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது.

எனவே, அதற்கு முன்பாக வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலையும், 4 மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் கால அட்டவணை தொடர்பான அறிவிப்பு நாளை(சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணை மார்ச் 10-ந்தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 11-ந்தேதி வாக்குப்பதிவு தொடங்கி, ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ந்தேதி எண்ணப்பட்டன.

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 52 இடங்களிலும் வெற்றி பெற்றது. மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு போதுமான எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலானது எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு வாழ்வா சாவா போராட்டமாக பார்க்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story