திருச்சூர் பூரம் விழாவில் சாமி சிலையை சுமந்து வரும் யானை பரமேக்காவு பத்மநாபன் உயிரிழப்பு! வருத்தத்தில் பக்தர்கள்


திருச்சூர் பூரம் விழா யானை பத்மநாபன் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர்,

உலகப்புகழ் பெற்ற 'திருச்சூர் பூரம் விழாவில்' பரமேக்காவு பகவதி அம்மன் சிலையை சுமந்து வரும் யானை பத்மநாபன் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகளால் கோலாகலமாக கொண்டாடப்படும் கேரளத்தின் பூரம் விழாவின் நாயகனாக திகழ்ந்த பரமேக்காவு ஸ்ரீ பத்மநாபன்(58) யானை இன்று மரணம் அடைந்தது.

திரிச்சூரில் பிரசித்தி பெற்ற பரமேக்காவு அம்மனுடைய விக்கிரஹம் தாங்கிய திடம்பை, 2006ஆம் ஆண்டு முதல் கடந்த 15 ஆண்டுகளாக தலையின் மேற்பகுதியில் சுமந்து சேவையாற்றி வந்தது பரமேக்காவு ஸ்ரீ பத்மநாபன் என்ற யானை.

பீகாரில் இருந்து கேரளத்துக்கு வந்த யானை கூட்டத்தில் ஒன்று தான் ஸ்ரீ பத்மநாபன். முதலில் நந்திலத் கோபு என்பவருக்கு சொந்தமான அந்த யானையை 2005 -ல் பரமேக்காவு தேவஸ்தானம் வாங்கியது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி யானை இன்று உயிரிழந்தது.

தற்போது பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக திரிச்சூர் பாடுக்காடு பகுதியில் யானையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நாளை கோடநாடு வனத்தில் யானையின் இறுதி சடங்கு நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story