சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு விசாரணை: வருகிற 19-ந்தேதி ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு விசாரணைக்காக வருகிற 19-ந்தேதி ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே சிறைக்கு சென்று தற்போது அவர் ஜாமீனில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வருகிற 19-ந் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி டி.கே.சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். தற்போது விதானசவுதாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். எனது அரசியல் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமலாக்கத்துறை மூலமாக தொந்தரவு கொடுக்கப்படுகிறது என்றார்.