சீன செயலி மூலம் கடன் வாங்கியதால் தொல்லை: என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


சீன செயலி மூலம் கடன் வாங்கியதால் தொல்லை: என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 6:46 PM GMT)

சீன செயலி மூலம் கடன் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் தொல்லை கொடுத்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் தேஜஸ் (வயது 22). இவர் எலகங்கா பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் மகேஷ். இந்த நிலையில் மகேஷ், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்யுமாறும் தேஜசிடம் கூறி உள்ளார். அவர் மீது பரிதாபப்பட்ட தேஜஸ், சீன செல்போன் கடன் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து, அதில் மகேசுக்காக கடன் வாங்கி கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கிய மகேஷ், அந்த கடனுக்கு சரியாக மாத தவணை செலுத்தவில்லை என தெரிகிறது. அதாவது, சுமார் ஓராண்டாக மகேஷ், தவணை தொகையையும், கடனையும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கடன் செயலி நிறுவனத்தினர் தேஜசை, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் கடனை செலுத்த தவறினால், தேஜசின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்திலும், உறவினர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் மிரட்டி உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கடன் செயலி நிறுவனத்தினர், தேஜசை தொடர்பு கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் தேஜஸ் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த தேஜஸ், திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது தேஜஸ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜாலஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தேஜசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த அறையில் சோதனை செய்தனர்.

அப்போது அவரது அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், 'அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள், எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. அதனால் இது தான் எனது இறுதி முடிவு' என்று உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நண்பனுக்கு, செல்போன் கடன் செயலி மூலம் கடன் வாங்கி கொடுத்ததும், ஆனால் அந்த கடனை அவரது நண்பர் செலுத்த தவறியதால், தேஜசை கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story