இ.எஸ்.ஐ. ரசீதுக்கு வரவு வைக்க வாடிக்கையாளரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம்; மருந்தாளுனர் கைது
இ.எஸ்.ஐ. ரசீதுக்கு வரவு வைக்க வாடிக்கையாளரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற மருந்தாளுனரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு;
ரூ.2 ஆயிரம் லஞ்சம்
மங்களூரு அருகே பனம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் குமார். இவரது மனைவி சுவாதி. இவர்கள் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். சுவாதி இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவு பெற்றுள்ளார். இதன் மூலம் இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்கி கொள்ளலாம்.
அதேபோல் தனியார் மருந்தகத்தில் மருந்துகள் வாங்கினால், அதற்கான மருந்து ரசீதை இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் கொடுத்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.
இந்த நிலையில் பிரசாந்த் குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவர் இதற்காக டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வருகிறார். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து, ஊசிகளை மனைவியின் இ.எஸ்.ஐ. கணக்கு மூலம் வாங்கி வந்துள்ளார்.
அதேபோல் நேற்று முன்தினம் அவர் தனக்கு தேவையான மருந்துகளை தனியார் மருந்தகத்தில் வாங்கி, அதற்கான ரசீதையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் மருந்து வாங்கிய ரசீதை இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் கொடுத்து பணத்தை திரும்ப பெற அதே பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மருந்தாளரான விஷ்ணுமூர்த்தி பட் என்பவரிடம் பிரசாந்த் ரசீதை கொடுத்து வரவு வைக்க கூறினார்.ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த விஷ்ணுமூர்த்தி, ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் ரசீதை வரவு வைப்பதாக கூறியுள்ளார்.
லஞ்ச பணம் பறிமுதல்
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் இது குறித்து ஊழல் தடுப்பு படை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ரசாயன பொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை பிரசாந்திடம் கொடுத்து, சில அறிவுரைகள் வழங்கி அனுப்பினர்.
இந்த நிலையில் மருந்தகத்திற்கு சென்ற பிரசாந்த் ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தை விஷ்ணுமூர்த்தியிடம் கொடுத்துள்ளார். அதை விஷ்ணுமூர்த்தி வாங்கி கொண்டார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் விஷ்ணுமூர்த்தியை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், விஷ்ணுமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.