தேர்தல் அரசியலில் இருந்து ஈசுவரப்பா திடீர் விலகல்; ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பினார்


தேர்தல் அரசியலில் இருந்து ஈசுவரப்பா திடீர் விலகல்; ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பினார்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் மகனுக்கும் டிக்கெட் கேட்டு வந்த நிலையில் தேர்தல் அரசியலில் இருந்து பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா திடீரென்று விலகினார். இதுதொடர்பாக அவர் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பெங்களூரு:

ராஜினாமா செய்தார்

கர்நாடக பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈசுவரப்பா. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் அவர் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை விவகாரத்தில் கமிஷன் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் குற்றமற்றவர் என தெரியவந்தது. இதையடுத்து தனக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் கடைசி வரை மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவே இல்லை. மந்திரி பதவி கிடைக்காததால், அவர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

விலக விரும்புகிறேன்

அரசியலை விட்டு விலகுவது குறித்து முக்கிய முடிவை அறிவிக்கவும் அவர் தயாரானார். ஆனால் கட்சி மேலிடம் கூறியதை அடுத்து அவா் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தன்னுடன் தனது மகனுக்கும் டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் பா.ஜனதா, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்று உறுதியாக கூறியது.

இந்த நிலையில் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விலகல் கடிதத்தை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பினார்.

அதில், "நான் சுயவிருப்பத்தின்பேரில் தேர்தல் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். அதனால் இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட எனது பெயரை பரிசீலிக்க வேண்டாம். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்க்கையில் பூத் மட்டத்தில் இருந்து துணை முதல்-மந்திரி வரைக்கும் பல்வேறு பதவிகளை வழங்கிய கட்சி மேலிட தலைவர்களுக்கு எனது நன்றியை தொிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மகனுக்கு டிக்கெட்

இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய ஈசுவரப்பா, "நான் தேர்தல் அரசியலை விட்டு விலகியுள்ளேன். எனது மகனுக்கு டிக்கெட் வழங்கும் விஷயத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். மோடியை மீண்டும் பிரதமராக்க நான் தீவிரமாக பாடுபடுவேன்" என்றார்.


Next Story