டெல்லி காய்கறி சந்தைக்கு திடீரென்று சென்ற ராகுல் காந்தி
டெல்லி காய்கறி சந்தைக்கு அதிகாலை திடீரென்று சென்ற ராகுல் காந்தி, வியாபாரிகளுடன் உரையாடினார். காய்கறி விலை குறித்து அவர்களிடம் விசாரித்தார்.
காய்கறி சந்தைக்கு சென்றார்
டெல்லி ஆசாத்பூர் காய்கறி சந்தை, ஆசியாவிலேயே பெரிய காய்கறி சந்தையாக கருதப்படுகிறது. இங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதிகாலை 4 மணியளவில் திடீரென்று சென்றார். அவரைக் கண்டு ஆச்சரியம் அடைந்த காய்கறி வியாபாரிகள், மகிழ்ச்சியுடன் வணக்கம் கூறினர். ராகுல் காந்தியும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். சிலர் அவருடன் கைகுலுக்கினர்.
விலையை விசாரித்தார்
காய்கறி வியாபாரிகளுடன் உரையாடிய ராகுல் காந்தி, காய்கறி, பழங்களின் விலை குறித்து விசாரித்தார். ராகுல் காந்தியுடன் ஏராளமான பாதுகாப்பு வீரர்களும் சென்றிருந்தனர். இதே ஆசாத்பூர் மண்டியில், 'தக்காளி விலை வெகுவாக உயர்ந்துவிட்டதால் அதை வாங்க தன்னிடம் பணமில்லை' என்று ஒரு காய்கறி வியாபாரி கண்ணீர் சிந்தும் வீடியோவை ஏற்கனவே டுவிட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்திருந்தார்.
சமீப நாட்களாக...
ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்குச் சென்று, டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரை சந்தித்துவருகிறார்.
அரியானா மாநிலம் மதினா கிராமத்தில் விவசாயிகளுடன் விவசாயப் பணியில் ஈடுபட்ட ராகுல் காந்தி, சில பெண் விவசாய தொழிலாளர்களை தனது தாய் சோனியா காந்தி வீட்டுக்கு அழைத்து, அவர்களுடன் மதிய உணவு உண்டது குறிப்பிடத்தக்கது.