புதிய கல்வி கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் அமித்ஷா பேச்சு


புதிய கல்வி கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்  அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 20 March 2023 10:45 PM GMT (Updated: 20 March 2023 10:45 PM GMT)

“புதிய தேசிய கல்விக்கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். நாடு முழுவதும் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்று அமித்ஷா பேசி உள்ளார்.

காந்திநகர்,

குஜராத்தின் மத்திய பல்கலைக்கழகத்தில் 4-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"புதிய தேசிய கல்விக்கொள்கை-2020, கல்வியை குறுகிய சிந்தனை வட்டத்திலிருந்து வெளியே கொண்டுவர பெரிதும் உதவும். அதன் தாக்கங்களை புரிந்துகொள்ள ஆசிரியர்கள் முதலில் கல்விக்கொள்கையை ஒவ்வொரு வரியாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். அப்படி படித்து புரிந்து கொண்டால்தான் அதை செயல்படுத்த முடியும்.

பொதுவாகவே கல்விக்கொள்கைகள் சர்ச்சையில் சிக்கிய வரலாறு உண்டு. இதற்கு முன்பு இருந்த 2 கல்விக்கொள்கைகளும் சர்ச்சைகளால் சூழப்பட்டவைதான். கல்வி சீர்திருத்தங்களை கொண்டுவர, அதை செயல்படுத்த பல்வேறு கமிட்டிகளும் உருவாக்கப்பட்டன. அவையும் சர்ச்சைகளில் சிக்கியவைதான்.

பிரதமர் மோடி, கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை யாராலும் எதிர்த்துப் பேசவோ, குற்றம் சாட்டவோ முடியவில்லை. ஒருவகையில் அனைவரும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். நாடு முழுவதும் அதை செயல்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

புதிய கல்விக் கொள்கையானது இந்திய குழந்தைகளின் கல்வி சிந்தனையை குறுகிய வட்டத்திலிருந்து மாற்றி, அவர்களின் குழந்தைப்பருவம் முதல், கல்விப் பருவம் முடியும் வரை புதிய பாதையை உருவாக்கப்போகிறது.

கல்வியின் லட்சியமே ஒரு மாணவனை முழு மனிதனாக மாற்றுவதுதான். இந்த புதிய கல்விக் கொள்கையானது உங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக உழைக்கிறது. 2015-17-ல் தொழில் தொடக்க திட்டங்கள் 724 ஆக இருந்தது 2022-ம் ஆண்டில் 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 107 இந்திய புதிய நிறுவனங்கள், அசாத்திய வளர்ச்சி கண்டுள்ளன. கண்டுபிடிப்பு உள்ளிட்ட தனித்த காப்புரிமங்களின் எண்ணிக்கையும் 2014-ல் 3 ஆயிரமாக இருந்தது, 2021-22-ல் 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 24 ஆயிரம் காப்புரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் 23 ஆயிரம் தனிப்பட்டவர்களின் காப்புரிமங்களாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story