மே.வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா கவலைக்கிடம்


மே.வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா கவலைக்கிடம்
x

கோப்புப்படம்

மே.வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கடந்த 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (வயது 79). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இவருக்கு சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அலிபூரில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆஸ்பத்திரியில் நேற்று புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. மேலும் பல்வேறு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ள டாக்டர்கள், எனினும் சீராக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினர்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல் நிலையை உயர் மருத்துவர்களை கொண்ட குழு ஒன்று தீவிரமாக கண்காணித்து வருகிறது

1 More update

Next Story