காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வை தாக்கி ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை


காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வை தாக்கி ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து அவரை தாக்கி ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

சிக்கமகளூரு-

தரிகெரே தாலுகாவில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து அவரை தாக்கி ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ.

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கடிஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவர் அங்கு தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் நாகராஜ் மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் அங்கு 15-க்கும் மேற்பட்ட கும்பல் வந்தனர். அவர்கள் கைகளில் கத்தி, அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் நாகராஜின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாகராஜ் திடுக்கிட்டு எழுந்தார். அவரை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி ஆயுதங்கள் முனையில் வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கு என்று கூறப்படுகிறது.

போலீஸ் சூப்பிரண்டு

நேற்று காலையில் நாகராஜின் வீட்டுக்கு சென்ற அக்கம்பக்கத்தினர், அவர் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பதற்றம் அடைந்த அவர்கள் இதுபற்றி தரிகெரே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், போலீசாருடன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்திருந்த தடயங்களை கைப்பற்றினர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். முன்னதாக போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

பரபரப்பு

அப்போது 15-க்கும் மேற்பட்ட நபர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜ் வீட்டில் நகைகள் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story