பெட்ரோல் டீசல் விலை இனி தினந்தோறும் உயரும் - ராகுல் காந்தி டுவீட்


பெட்ரோல் டீசல் விலை இனி தினந்தோறும் உயரும் - ராகுல் காந்தி டுவீட்
x
தினத்தந்தி 22 May 2022 1:06 PM GMT (Updated: 22 May 2022 1:08 PM GMT)

மக்களை முட்டாளாக்கும் போக்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது என்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புகளை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ''மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது" என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பணவீக்கத்திலிருந்து விடுபட மக்களுக்கு தேவையான உண்மையான நிவாரணத்தை வழங்குங்கள். மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம், அவற்றின் விலை வீழ்ச்சியை விட அதிகமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"பெட்ரோல் விலை: மே 1, 2020: ரூ.69.5, மார்ச் 1, 2022: ரூ.95.4, மே 1, 2022: ரூ.105.4, மே 22, 2022: ரூ.96.7 ஆக உள்ளது. மேலும் பெட்ரோல் விலை மீண்டும் தினந்தோறும் ரூ.0.8 மற்றும் ரூ.0.3 என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணத்தை பெறும் தகுதி மக்களுக்கு உள்ளது. மக்களை முட்டாளாக்கும் போக்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்."

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Next Story