'ஹனிடிராப்' மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது
‘ஹனிடிராப்’ மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்தவர் திலீப்குமார். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக பிரியா என்ற ஹலீமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம்(அக்டேபர்) 28-ந் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை என்றும், வீட்டுக்கு வரும்படியும் திலீப்குமாருக்கு பிரியா தகவல் அனுப்பினார். அதன்படி, அங்கு சென்ற திலீப்குமாரை ஆபாசமாக வீடியோ எடுத்து பிரியா, அவரது நண்பர்கள் மிரட்டினார்கள். பின்னர் திலீப்குமாரிடம் இருந்த பணம், விலை உயர்ந்த செல்போனை கொள்ளையடித்தனர். இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த பிரியாவை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாகிவிட்ட பிரியாவின் நண்பர்கள் 4 பேரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், பிரியாவின் நண்பர்களான ஜாகித், சையத் முதாகீர், பர்கான் கான், இஸ்மாயில் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திலீப்குமாரிடம் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொண்ட பிரியா, அவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி, 'ஹனிடிராப்' மூலம் வீடியோ எடுத்து பணம் பறித்தது அம்பலமாகி உள்ளது. இதற்கிடையில், கைதான 5 பேரும் மேலும் சிலரை 'ஹனிடிராப்' முறையில் மிரட்டி பணம் பறித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.