அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது பிபோர்ஜாய்: சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை
மிக தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் போது மணிக்கு 150 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த ஜூன் 5ம் தேதி மாலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த 'பிபோர்ஜாய்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'பிபோர்ஜாய்' புயல். மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தற்போது இந்த புயல் மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்தநிலையில்,பிபோர்ஜாய்' புயல் கிழக்கு மத்திய அரபிக்கடலில் அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது. சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'பிபோர்ஜாய்' அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. வரும் ஜூன் 15ம் தேதி நண்பகலில்
பாகிஸ்தான் மற்றும் குஜராத் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும். மிக தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் போது மணிக்கு 150 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.